இசைஞானிக்கு இன்னும் ஒரு மணிமகுடமாய் பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இனிய இசையால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமிய பாடல் இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடித்த கேரளாவைச் சேர்ந்த லட்சுமி குட்டி என்ற மூதாட்டி, சமூக சேவைக்காக சுதந்திர போராட்ட வீரர் சுதன்ஷூ பிஸ்வாஸ், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக ராஜகோபாலன் வாசுதேவன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்திரா தலைவர் பரமேஸ்வரன் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.